top of page
  • Writer's pictureNEETHIIN THEERPPU

உங்கள் அரசியலுக்காக நீதிமன்றத்தை இழுக்காதீர்கள் -நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்தும் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பியுமான சிவி சண்முகம் போராட்டங்களிலும் சாலை மறியலிலும் ஈடுபட்டார். அதேபோல், விழுப்புரத்தில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கோரியும் சிவி சண்முகம் போரட்டத்தில் ஈடுபட்டார்.


இது சம்மந்தமாக 12 வழக்குகள் சிவி சண்முகத்திற்கு எதிராக காவல்துறை பதிவு செய்து இருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவி சண்முகம் வழக்கு தொடர்தார்.


அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சிவி சண்முகம் தரப்பில் முன்வைத்த வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் , 6 வழக்குகளை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததை காரணம் காட்டி ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் 1 வழக்கை திரும்பப் பெற சிவி சண்முகத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி. 2 வழக்குகளில் 6 வாரங்களில் காவல்துறை பதிலளிக்கவும் , மூன்று வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடி உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறும் நீதிபதி கூறினார் .


அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட போது அவரை சிறையில் அடைத்த நீதிபதி பயமுறுத்தப்பட்டு இருக்கிறார், அச்சுறுத்தப்பட்டு இருக்கிறார் என்று சிவி சண்முகம் ஒரு போராட்டத்தில் பேசியிருக்கிறார். இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அப்போது நீதிபதி, அரசியல் போராட்டங்களில் தேவையில்லாமல் ஏன் நீதிபதியை இழுக்கிறீர்கள் என்றும் நீதிபதி அச்சுறுத்தப்பட்டு இருக்கிறார் என்றும் மிரட்டப்பட்டு இருக்கிறார் என்றும் எப்படி கூற முடியும்? எனவும் சிவி சண்முகம் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.


மேலும் உங்கள் அரசியலுக்காக நீதிமன்றத்தை இழுக்காதீர்கள் எனவும், எந்த கட்சி என்று நீதித்துறை பார்ப்பது இல்லை, நீதிமன்றங்களை பொறுத்தவரை ஒரே அரசுதான் எனவும் நீதிபதி தெரிவித்து வழக்குகளின் விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.






3 views0 comments
bottom of page