top of page
  • Writer's pictureNEETHIIN THEERPPU

“போக்சோ வழக்குகளை ஓர் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்” - ஐகோர்ட் தலைமை நீதிபதிடி.ராஜா.




புதுச்சேரியில் கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. போக்சோ குற்ற வழக்குகள் மீதான விசாரணை, புதுவை மாவட்ட முதன்மை அமர்வு திமன்றத்தில் செயல்பட்டு வந்தது. போக்சோ வழக்குகளை தலைமை நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து வந்தார். இந்நிலையில், போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டுள்ளார். போக்சோ சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா இன்று நடந்தது.

இந்த நிகழ்வில் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசுகையில், "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தில் இது 29-வது நீதிமன்றமாகவும், புதுவையில் மட்டும் போக்சோ நீதிமன்றத்தோடு 18 நீதிமன்றங்கள் செயல்பட உள்ளன.

மிகக் கடுமையான சட்டங்கள் போக்சோவில் உள்ளன. பல வழக்குகளில் கொலை, கொள்ளை அடித்தவர்களுக்கு மிகப் பெரிய தண்டனையாக தூக்கு தண்டனை தரப்படுகிறது. போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான சான்றிதழ், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு காயம், சாட்சிகள் இருந்தால், அவர் குற்றவாளி. குற்றத்தை செய்யவில்லை என அவரின் வழக்கறிஞர்கள்தான் நிரூபிக்க வேண்டும். குழந்தைகளை பயமுறுத்துவதுபோல கேள்வி கேட்க முடியாது

போக்சோ குற்றத்தில் ஈடுபட்டால், இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படும். வழக்கறிஞர்கள் போக்சோ வழக்கை சாதாரணமாக நடத்தி விட முடியாது. இந்த வழக்குக்கு இங்கு மட்டும்தான் ஜாமீன் பெற முடியும். ஓர் ஆண்டுக்குள் வழக்குகளை விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்குகளைக் கையாள வக்கீல்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தை என நீதிபதி முடிவு செய்துவிட்டால், வழக்கு நடைபெறும்போதே குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட முடியும். கொடுமையான குற்றம் செய்திருந்தால் மரண தண்டனையும் விதிக்கப்படலாம். காலங்கள் மாறி வருகிறது. காலதாமதமின்றி நீதி வழங்கப்படுகிறது. சட்டங்களை அறிந்துகொள்ளாமல் வழக்கறிஞர்கள் நீதிமன்றதுக்கு வர முடியாது. வெற்றிகரமான வழக்கறிஞர்கள் மாற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும்" என்றார். இந்த நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "புதுவை, காரைக்காலில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. புதுவையில் போக்சோ விரைவு நீதிமன்றம் அமைத்து, வழக்குகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இதன்படி இப்போது விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. புதுவையில் வக்கீல்கள், நீதிபதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தரும். விரைவான நீதி குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் இப்போது நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கிடைக்கும் தீர்ப்பின் மூலம் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்படும். மேலும், தேவையான நீதிமன்றங்களையும் அரசு கட்டித் தரும். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கருத்தரங்கு கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் மூன்றாவது தளத்தில், போக்சோ விரைவு நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்து வைத்தார். முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். வழக்கறிஞர்கள் அமரும் இருக்கையில் நீதிபதி டி.ராஜா, முதல்வர் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். அப்போது, போக்சோ நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போக்சோ நீதிமன்ற நீதிபதி ஷோபனாதேவி தலைமையில் விசாரணை நடந்தது. முதல் குற்றவாளியை அழைத்தபோது மின்சாரம் தடைபட்டது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜா, மின்சாரத்தை சரிசெய்ய அறிவுறுத்தி பணிகள் நடந்து முடிந்தன

bottom of page